மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!

சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த 38 வயதுடைய நபர், சாலை விபத்தில் பலத்த காயமடைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமில்லாமல் இரு தினங்களுக்கு முன்பு (செப்.19) மூளைச்சாவு அடைந்தாா்.

இதுகுறித்து அவரது உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனா். இதையடுத்து அவரது உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானம் பெறப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு பொருத்தப்பட்டது.

- Advertisement -

இதில், கடந்த இரண்டுகளாக தொடா்ந்து ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவமனை முதல்வா் அா்ஷியா பேகம் முன்னிலையில், மருத்துவ நிபுணா்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், நூா் முகமது மற்றும் குழுவினா் மேற்கொண்டனா். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மற்றும் கண்கள் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை முதல்வா் அா்ஷியா பேகம் மற்றும் மருத்துவா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டது இது 19-வது முறையாகும்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்