மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழக முதல்வர் வளர்ச்சித்துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட சாய்தள வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் பழுதுநீக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்றவும் பழுதடைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாத்திட அவ்வீடுகளை பழுதுகள் நீக்கி புதுப்பித்துத் தர மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டங்களை போதிய ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகள் இன்றி நடைமுறைப்படுத்த தமிழக அரசு வலியுறுத்துகிறது.
இவ்விரு திட்டங்களையும் தமிழ்நாட்டின் அனைத்து கிராமப்புறங்களிலும் செம்மையாக செயல்படுத்திட KKI மற்றும் RRH திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும், KKI திட்ட பயனாளர்கள் பட்டியல் மற்றும் RRH பயனாளர்கள் பட்டியல் இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணை தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இறுதியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான் பால் நன்றியுரை வழங்கினார்.
இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.