உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது!

நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்!

உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது!

நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்!

Bismi

டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்!

தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி! திருநெல்வேலி,டிசம்பர் 1:- தமிழக நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று ( டிசம்பர்.1) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் மொத்தம் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், “பொருநை அருங்காட்சியகம்” பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன இந்த மாதம் (டிசம்பர்) “முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார். தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் விதமாக, முதலமைச்சரின் தலைமையிலான, இந்த திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலமாக பல்வேறு இடங்களில், அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கிடைக்கப்பெற்ற அரும்பொருட்கள், ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், உலகெல்லாம் வாழும் தமிழ் மக்களிடமும், வரலாற்று அறிஞர்களிடமும், தமிழக மக்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, தற்போது திருநெல்வேலியில் “பொருநை அருங்காட்சியகம்” அமைகிறது. பொருநை நதி என்று அழைக்கப்படும், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த, தமிழர்களின் நாகரிக தொன்மையை விளக்கும் வகையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில், அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கெல்லாம் கிடைத்த அரும்பொருட்களை, திருநெல்வேலியில் அழகுற காட்சிப்படுத்த வேண்டும்! என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்காக ஏறத்தாழ 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காட்சி கூடங்களுடன் கூடிய, கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் (Display) பணிகள், தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தில் (டிசம்பர்) முதலமைச்சர் குறிப்பிடும் தேதியில், மிக விரைவில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கும், அவர்களின் வருகைக்கும், ஆர்வமிக்க பார்வைக்கும், இது அர்ப்பணிக்கப்படும். பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வரும்போது, அவர்கள் அருங்காட்சியகத்தோடு ஒன்றிணைந்து (Interact) தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில், நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போதைய தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் அளவிற்கு, பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இரும்புக்காலத்தின் தொன்மை என்பது தமிழ் மரபில், தமிழ்நாட்டின் மண்ணில்தான் துவங்கியது என்பதை, நாம் ஏற்கனவே அறிவுப் பூர்வமாக ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அதற்கான ஆய்வு தரவுகளின் முடிவுகள், தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்து இருக்கின்றன. எனவே, நம்முடைய “பொருநை” அருங்காட்சியகத்திலும்இதுகுறித்த செய்திகள் மற்றும் சான்றுகள் இடம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன!”- இவ்வாறு, அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக அவர், பாளையங்கோட்டை ரெட்டியார் பட்டியில் உள்ள, பொருநை அருட்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், தமிழக முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்