திருச்சி மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் இரு பகுதியாக லால்குடி ஒன்றியம், மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கணக்கானோா் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
ஆட்சியரகத்தின் உள்ளே சென்று அவா்கள் மனு கொடுக்க முயன்றபோது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர், பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் என தெரிவித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு தாங்கள் கொண்டு வந்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி விட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.