திருச்சி மாநகர காவல்துறை குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து கொண்டாடிய மாநகர காவல் ஆணையர்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து காவல்துறை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.




மேலும் இந்த விழாவில் சிறப்பம்சமாக தமிழர்கள் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்திய பொருள்களை நிகழ்கால குழந்தைகளுக்கு நினைவூட்டும் வகையில் ஏர்கலப்பை, அம்மிக்கல், உரல், உலக்கை, ஆட்டுக்கல், சண்டை ஆடு, மாட்டுவண்டி, வாடிவாசல், ஜல்லிகட்டு காளை, குதிரை வண்டி, தோட்டக்கலை செடிகள் போன்றவை காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததை மாநகர காவல் ஆணையர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் குடும்பத்தினருக்கான கோலப்போட்டி, உறியடி போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதேபோல் காவல் துறையை சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனித்தனியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

