திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் முக.ஸ்டாலின்!
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவும், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள, பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் இரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, துரை வைகோ, அருண் நேரு, கவிஞர் சல்மா, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜி, பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், அப்துல் சமது, கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார், தமிழரசி, முத்துராஜா, துரை சந்திரசேகர், நீலமேகம், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Comments are closed.