நூற்றாண்டு பழமையான காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது – எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருச்சி மாநகரில் நூற்றாண்டுகளாக செயல்பட்டுவரும் காந்திசந்தையை இடமாற்றம் செய்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட் வளாகம் கட்டி அங்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தீர்மானித்துள்ளது.
காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, அப்துல் மாலிக், வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் ஷேக் தாவூத், வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், வர்த்தக அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ், எஸ்.டி.பி.ஐ மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், ….
காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்துவரும் கமிஷன் வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளையும் பாதிக்காத வகையில் அனைவருக்கும் புதிதாக தொடங்க உள்ள பஞ்சப்பூர் வணிக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், இல்லாவிட்டால் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையிலேயே காந்தி மார்க்கெட் தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும் திருச்சி மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்வதை ஆட்சியர் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.