பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கு: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கு: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!
கள்ளக்குறிச்சி: பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக அணுகியதாகப் பதியப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை போலீஸார் இன்று (நவ.27) கைது செய்தனர்.
புகாரின் பின்னணி:

கடந்த நவம்பர் 23-ம் தேதி, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு விரும்பத்தகாத வகையில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக அணுகியதாகவும் பெண் அதிகாரி ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அருள் விக்னேஷ் மீது பாலியல் ரீதியாக அணுகுதல், பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசச் செய்கை மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தீவிரமடைந்த விசாரணை:
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஆட்சியரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணை அதிகாரியான எஸ்பி சிருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஷானாஸுடன் ஆலோசனை நடத்தி, அதுவரை திரட்டப்பட்ட விசாரணைக் கோப்புகளைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அவர், புகார் அளித்த பெண் அதிகாரியிடமும் நேரில் விசாரணை நடத்தினார்.
சம்மன் மற்றும் ரகசிய வாக்குமூலம்:
முன்னதாக, நேற்று முன்தினம் கச்சிராயாப்பாளையம் சாலையில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷின் இல்லத்திற்குச் சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, பூட்டப்பட்டிருந்த வீட்டைத் திறந்து உள்ளே சென்று எம்எல்ஏவிடம் விசாரணைக்கான சம்மனை வழங்கினார்.
மறுபுறம், வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக, கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர்-2 சுவாதி அழகப்பன் முன்னிலையில் புகார் அளித்த பெண் அதிகாரி ரகசிய வாக்குமூலம் அளித்தார். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வழக்கின் போக்கு திசைமாறினாலும், நீதித்துறை நடுவரிடம் அளிக்கப்பட்ட இந்த வாக்குமூலம் வழக்கின் மிக முக்கிய சாட்சியமாக இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிரடி கைது:
தொடர் விசாரணை மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை அதிகாரி திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
#Kallakurichi #TVK #ArulVignesh #Arrest #TamilNaduNews #TNPolice #BreakingNews





Comments are closed.