11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் – திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அறிவிப்பு!
ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளில் தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மாத ஊதியமாக ரூபாய் 12ஆயிரத்து 500 பெற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், திமுக தனது தேர்தல் அறிக்கை 181 ல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்ன வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேசு ராஜா முன்னிலை வகித்தார். இதில் திருச்சி மாவட்டத்தை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 30 வரை வாரம் தோறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும், உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் பணி நிரந்தர கோரிக்கைக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், இல்லையென்றால் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடர்ந்து சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் மாவட்ட செயலாளர் சேசுராஜா தெரிவித்தார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மனோகரன் இணை செயலாளர்கள் சசிகுமார், புவனேஸ்வரன் துணைத் தலைவர்கள் காந்திநாதன், ரூஸ்வெல்ட், மகளிர் அணி செயலாளர் ஸ்டாலின் டாரத்தி, செல்வராணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.