கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவேண்டி திருச்சி குங்கும வல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட வளையல் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது.
திருச்சி உறையூர் சாலைரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை, ஸ்ரீகுங்குமவல்லி (வளைகாப்பு நாயகி) என்றழைக்கப்பட்டு, வருடம் தோறும் தை மாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமை வளையல் காப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
பிரசித்திபெற்ற இந்த கோவிலில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 48 நாட்கள் தினசரி உலக மக்கள் நலனுக்காவும், ஹோமம் நடைபெற்று அதன் பின்னர் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடையவும், 2 ஆம் நாள் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், 3 ஆம் நாள் திருமண தடை உள்ளவர்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்து, இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன் ஒரு பகுதியாக முதல் நாள் விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கான சுகப்பிரசவம் நடைபெற வேண்டி குங்குமவல்லி தாயாருக்கு 2-லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கு 48 நாட்கள் அம்மன் திருவடியில் வைத்து பூஜிக்கப்பட்ட வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக வளைகாப்பு அம்மனுக்கு தேவையான மங்களப் பொருட்கள், தாம்பூல பொருட்கள் அனைத்தும் கர்ப்பிணி பெண்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்து பின்னர் மகா தீபம் ஆராதனை நடைபெற்று கர்ப்பிணிகளுக்கு வளையல் போடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த விழாவில் திருச்சி, மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்தும் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தும் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட குங்கும வல்லி தாயாரை தரிசனம் செய்தனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மற்றும் ஹரிஹர குருக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.