ஶ்ரீரங்கம் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி – காவல் ஆணையரிடம் புகார்!

0

- Advertisement -

திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 6 வது ஜீயர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயர் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…

திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடம் 300 வருடங்கள் பழமையானதாகும். இந்த மடத்திற்கு ஶ்ரீரங்கம் உள்பட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 500 கோடிக்கும் மேல் அசையா சொத்துக்கள் உள்ளது. இந்த இடங்களில் பலர் குறைவான குத்தகை தொகை அடிப்படையில் வசித்து வருகிறார்கள்.

மேலும் 2010 ஆம் ஆண்டு 80 வயதுடைய முதியவர் ஜீயராக இருந்தார். அப்போது உள்ளூரில் ரியல் எஸ்டேட் செய்யும் சிலர் தொடர்ந்து ஜீயருக்கு பல இன்னல்களை கொடுத்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த மடம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆறாவது ஜீயராக ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயரை நியமனம் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் இந்த மடத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பெறப்படும் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து வந்தார். இந்த மடத்தின் பெயர் பலஹாரி சீனிவாச பெருமாள் மடம், ஆனால் இந்த மடத்தின் பெயரில் சிறிய மாற்றம் செய்து புதிதாக டிரஸ்ட் தொடங்கி மடத்திற்கு சொந்தமான இடங்களை பத்திரப்பதிவு செய்து கோடிக்கணக்கான ரூபாயை சிலர் பெற்றுள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த மடத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த வாமன ராஜா என்பவர் முயற்சி செய்து வருகிறார். இவர் ஏற்கனவே பல இடங்களை கைப்பற்றி பல தொழில்களை செய்து வருகிறார்.

குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக மடத்திற்கு சொந்தமான ரூபாய் 60 கோடி மதிப்புடைய இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து ஜீயரை அச்சுறுத்தி வருகிறார்.

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த மடத்தில் பணிபுரிந்த கோவிந்த ராமானுஜம் என்பவர் மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்பதிவு செய்து தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவருக்கு உடந்தையாக சீனிவாச ராமானுஜம், மாதவாச்சாரியா ராமானுஜம், அனந்த ராமானுஜம், ரங்கா, முத்துகிருஷ்ண ராமானுஜம் ஆகியோர் ஒன்றிணைந்து மடத்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆகையால் இந்த ஏழு நபர்கள் மீதும் காவல்துறை தரப்பில் முறையான வழக்குகள் பதிவு செய்து 60 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க வேண்டும். மேலும் இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில நபர்களுடன் சென்று ஜீயரை மிரட்டி உள்ளனர். அதன் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்