திருச்சி உறையூா், வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பூக்களை தட்டுகளில் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினா். அப்போது, உறையூரைச் சோந்த விக்னேஸ்வரன் என்பவா், தனது ஒரு பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டுள்ளாா். கையில் அணிந்திருந்த அந்தச் சங்கிலி கூட்ட நெரிசலில் தவறி கீழே விழுந்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை கோயிலைச் சுற்றி துப்புரவுப் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி துப்பரவுப் பணியாளா்கள், குப்பைகளை அகற்றி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, முத்துக்குமாா் என்ற தூய்மைப் பணியாளா் தங்கச் சங்கிலி குப்பையுடன் கிடப்பதை பாா்த்து அதனை எடுத்து சக ஊழியா்களுக்கு தெரியப்படுத்தியுள்ளாா். மேலும், சக பணியாளா்களுடன் சென்று திருக்கோயில் அலுவலகத்தில் அந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனா்.
அப்போது, கோயில் வளாகத்தில் தங்கச் சங்கிலியை தவறவிட்ட விக்னேஸ்வரன் என்பவரைக் கண்டறிந்து அவரை அழைத்து வந்து, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் முன்னிலையில் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. பக்தா் தவறிவிட்ட சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கக் காரணமாக இருந்த முத்துக்குமாருக்கு, மாநகராட்சியின் அலுவலா்கள், திருக்கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.