திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மாரிஸ் ரயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்தும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி ரத்னவேல், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினரும் மகளிர் அணி மாவட்ட செயலாளருமான நசீமா பாரிக் மற்றும் நிர்வாகிகள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,….
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதேபோல திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையதையும் அவசர கதியில் திறந்ததை கண்டித்தும், மாரிஸ் ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்காததை கண்டித்தும், திருச்சி மாநகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமை அடையவில்லை அதனை கண்டித்தும் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இந்த அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில்
சொத்து வரி, மின் கட்டணம், குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளது. மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் 1859 பேர் விபத்து மூலம் உயிரிழந்துள்ளனர். இதை அரசும் மாவட்ட நிர்வாகமும் ஏன் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றால் அரசு இதில் தலையிட்டு இதற்கு என்ன தீர்வு என்பதை காண வேண்டும். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் திருச்சி மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டிருந்தது என்றார்.
பாஜக வழிகாட்டல் படி இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அனைவரும் ஒன்றிணைவீர்களா என்ற கேள்விக்கு,
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என அனைவரும் கூறுகிறார்கள் என தெரிவித்தார்.
Comments are closed.