திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சுத்தாது, குக்கர் விசில் அடிக்காது, இரட்டை இலை மட்டுமே துளிரும் – அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலகலப்பான பேச்சு!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளான தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் கருப்பையா தனக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தர வேண்டும், பொது மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி நமக்கு சாதகமாக உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சுத்தாது. குக்கர் விசில் அடிக்காது. ஆனால் இரட்டை இலை துளிர்வது உறுதி என்றார். நமது வேட்பாளர் ஓடுற பாம்பை மிதிக்கிற வயதுக்காரர். வேண்டுமென்றால் நீங்கள் பாம்பை விட்டு சோதனை செய்து பார்க்கலாம் என்று பேசிய போது சிரிப்பலை ஏற்பட்டது.