திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பு!
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிகாலை துவங்கி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாது இரவு, பகலாக அவர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும், அவருக்கு ஆதரவாக அதிமுகவினர், கூட்டணி கட்சியினர், திரைப்பட நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கீழ உத்திரவீதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக நடிகையும், நட்சத்திர பேச்சாளருமான காயத்ரி ரகுராம் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், இரட்டை இலைக்கு வாக்களிக்க கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உறவினர்கள் வீடு போல அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் உரிமையுடன் சென்று, அவர்களுடன் அமர்ந்து அதிமுகவின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறினார். அவரை கண்டதும் பொதுமக்கள் ஆர்வமுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.