சிலம்பம், கட்டைக்கால், கரகம் மூன்று கலைகளையும் ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்த திருச்சி மாணவி!
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி முருகேசன். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற நடனம் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் திருச்சியில் பல்வேறு பள்ளிகளில் சிலம்பம், கராத்தே மற்றும் நடனம் ஆகிய வகுப்புகளை எடுத்து வருகிறார். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிலம்பத்தில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் மாணவி லிங்கேஸ்வரி முருகேசன் சிலம்பம், கட்டைக்கால், கரகம் ஆகிய மூன்று கலைகளையும் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையானது பி.டி.ஜே மாஸ்டரி புக் ஆப் யூனிவர்சல் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மாணவி லிங்கேஸ்வரி முருகேசன் கூறுகையில்,.. எனக்கு பல்வேறு உலக சாதனை படைக்க வேண்டும் என்றும், எனக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தால் என்னை போல் பல்வேறு கலைஞர்களை என்னால் உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார். உலக சாதனை நிகழ்த்திய மாணவி லிங்கேஸ்வரி முருகேசனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.