ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு, திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா தங்கம் வென்று முதல் இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜானவி வெள்ளி பதக்கம் வென்று இரண்டாம் இடம் பிடித்தனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 8ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கிருத்திகா தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
இந்நிலையில் திருச்சி இரயில் நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவி கிருத்திகாவுக்கு, காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பிலும், மாணவியின் பயிற்ச்சியாளர், மாற்றம் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் முனியாண்டி, ஒயிட்ரோஸ் பொதுநல அமைப்பின் தலைவர் சங்கர், அமிர்தம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா விஜயகுமார், சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தின் குடும்ப நல ஆலோசகர் சசி, அப்துல்கலாம் டிரஸ்ட் நிர்வாகி முத்துசெல்வி, சமூக செயற்பாட்டாளர்கள் கோவிந்தசாமி, ராதாகிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங், ராபி, சாலை தீ விபத்து பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பிரச்சாரர் சீனிவாச பிரசாத், தினசேவை அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் கண்ணன், தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகர் இயக்குனர் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆர்.ஏ.தாமஸ், சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஆறுமுகம், வழக்கறிஞர் கார்த்திகா மற்றும் மாணவியின் பெற்றோர், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவி கிருத்திகா செய்தியாளர்களிடம் பேசுகையில்….
பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். இந்நிலையில் தொடர் தீவிர பயிற்சி எடுத்து தற்போது தேசிய அளவிலான 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே எனது வாழ்நாள் லட்சியம் என தெரிவித்தார்.
Comments are closed.