திருமண அலங்கரிப்பாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – மாநிலத் தலைவர் பாலமுருகன் கோரிக்கை!
தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்….
திருமண அலங்கரிப்பு தொழில் சார்ந்து, தமிழக முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் திருமணம் மற்றும் விசேஷ காலங்களை தவிர மற்ற நாட்களில் வேலை இல்லாமல் வருவாய் இன்றி தவிர்த்து வருகின்றனர்.
அது போக அவ்வப்போது நடக்கும் தீவிபத்துகளால் அலங்காரப் பொருட்கள் தீப்பிடித்து எறிவதால் பொருட்கள் சேதம் அடைந்த வண்ணம் உள்ளது. திருமண அலங்கரிப்பிற்கான பொருட்களுக்கு காப்பீடு செய்யப்படுவதில்லை.
இதற்கு பயன்படும் அனைத்தும் பிளாஸ்டிக் மற்றும் துணிகளால் தயாரிக்கப்பட்டதால் மழை பெய்தால் நனைந்து விடுகிறது. அந்தப் பொருட்களை என்னதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சேதம் ஆகும் என்பது தவிர்க்க முடியாதது.
கடந்த சில மாதங்களில் மட்டும் திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் என சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தாலும், போலீசார் இழப்பீட்டின் மதிப்பை கணக்கிடுவதில் குளறுபடிகள் ஏற்படுகின்றது.
முழுமையான சேத மதிப்பை காவல் துறை மூலம் தகவல் அறிக்கை தரப்படுவதில்லை. இதனால் இழப்பீடு என்பது வெளியே தெரியவில்லை. இதனால் திருமணம் அலங்கரிப்பாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்.
மேலும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எங்கள் தொழிலுக்கு ஆதரவு கொடுத்து நாடாளுமன்றத்தில் எங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி பேசுவதாக வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கு நாங்கள் வாக்களிப்போம் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் சங்கத்தை சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .