ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திருச்சியில் நடைபெற்றது!
243 அரசாணை வெளியிட்டதற்காகவும், ஆய்வக உதவியாளர் பணி விதிமுறைகள் வெளியிட்டதற்காகவும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதியம் உயர்த்தி வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம், தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் தங்கவேலு வரவேற்றாா். பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மண்ட் தொடக்கவுரையாற்றினாா். ஆய்வக உதவியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் அா்ஜுன், சிறப்பாசிரியா்கள் சங்கத் தலைவா் கெளதமன், அரசுப் பள்ளி ஆசிரியா் சங்க இணைச் செயலா் முருகையா ஆகியோா் நன்றி தெரிவித்தனா்.
இம்மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்…
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் ஆசிரியா்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஒன்றிய அளவில் மட்டுமே பதவி உயா்வு பெற்று வந்த ஆசிரியா்களுக்கு மாநில அளவில் பதவி உயா்வு பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியா்களுக்கு ரூ.2,500 ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா்.