விஜய் பட வில்லன் நடிகர் உடல்நல குறைவால் காலமானார்
விஜய் பட வில்லன் நடிகர் உடல்நல குறைவால் காலமானார்
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார்.
கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர்,
2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
தெலுங்கு நடிகரான அவருக்கு தமிழில் இது தான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், குத்து,ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி 2 என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.
ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் வசனங்கள் தமிழில் மிகவும் புகழ்பெற்றன.
‘சாமி’ படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அதே போல விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் கோட்டா சீனிவாச ராவ் ஏற்று நடித்த ’சனியன் சகடை’ என்ற கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது. வில்லன் கதாபாத்திரம் தவிர்த்து பல்வேறு குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் பெண் வேடமிட்ட சந்தானத்துடன் கோட்டா சீனிவாச ராவ் நடித்த காட்சிகளை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர்
என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மெலிந்த உடலுடன் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. இந்த நிலையில் 83 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.