ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது, பிரபல வேளாண் வல்லுநர்கள் பங்கேற்பு

0

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் ஈஷா விவசாய இயக்கத்தின் மாதிரி பண்ணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் இயற்கை விவசாய பயிற்சியாளர் பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நமது வாழ்வில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் முக்கிய உணவு பொருளான அரிசியானது வெறும் உணவுப் பொருளாக மட்டுமே அல்லாது நமது கலாச்சாரம் மற்றும் ஒவ்வொரு பாரம்பரிய நிகழ்வுகளிலும் நம்முடன் தொடர்ந்து பயணித்து வருகிறது. ஆனால் அதைப் பயிரிடும் நெல் விவசாயிகளின் இன்னல்கள் மட்டும் இன்றும் தீர்ந்தபாடில்லை. இதைக் களையும் விதமாக நெல் சாகுபடியில் விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஈஷா சார்பில் வேளாண் வல்லுனர்களின் கருத்தரங்கமும் கண்காட்சியும் திருச்சியில் நடைபெற உள்ளது. முக்கியமாக இயற்கை நெல் விவசாயத்தில் பாரம்பரிய ரகங்களில் நல்ல மகசூல் எடுக்கும் முறைகளும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகளையும் இந்நிகழ்வில் வல்லுனர்கள் விவாதிக்க உள்ளனர்.
பிரபல வேளாண் வல்லுநர் திரு. பாமயன் அவர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார். பூச்சி செல்வம் அவர்கள் நெல் பயிரில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். கோ.சித்தர் அவர்கள் பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்தும், கால் கிலோ விதை நெல்லில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து ஆலங்குடி பெருமாள் அவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.
இது தவிர இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள், நெல்லுக்கு உகந்த இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் செலவில்லா பயிர் மேலாண்மை, இதுமட்டுமின்றி கால்நடை இல்லாதவர்களும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். அத்துடன், இந்நிகழ்வில் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.
இந்த ஒரு நாள் நிகழ்ச்சி திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்