சட்ட விரோதமாக சீனர்களுக்கு
விசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2010-2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்காக ரூ.50 லட்சத்தை சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக நடத்தப்பட் சோதனையின் போது ஒத்துழைப்பு வழங்காத கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை இரு தினங்களுக்கு முன் சிபிஐ கைது செய்தது 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பியதும் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதனால், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம்.கே.நாக்பால் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், ‘கார்த்தி சிதம்பரத்தை தற்போது கைது செய்ய எந்த திட்டமும் இல்லை. ஒருவேளை கைது செய்ய நேரிடும் பட்சத்தில் 48 மணி நேரம் முன்பாக அவருக்கு எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்படும்,’ என தெரிவித்தார். அப்போது குறக்கிட்ட கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல், ‘இந்த அவகாசம் போதாது. அவர் மே 24ம் தேதிதான் இந்தியா வருகிறார்,’ என்றார்.
பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க முடியாது. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக சிபிஐ நோட்டீஸ் வழங்க வேண்டும். மேலும், அவர் இந்தியா திரும்பியதும் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைக்க வேண்டும்,’ என உத்தவிட்டார்.