மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அமைச்சர் குமாரசாமிக்கு கோவில் அர்ச்சகர்கள் மரியாதை செய்தனர்.
தரிசனம் செய்த பின்பு அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
ரங்கநாதரின் அருளை பெறுவதற்காக நான் இங்கு வந்தேன். தொடர்ந்து இங்கிருந்து சேலம் செல்ல உள்ளேன்.
அங்கு சேலம் உருக்காலையை ஆய்வு செய்கிறேன். 1970 களில் தொடங்கப்பட்ட சேலம் உருக்காலை மூலம் ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது நலிவடைந்துள்ளது. அதை மீண்டும் புத்துயுரூட்டி வேலைவாய்ப்பை பெருக்குவது அதனை வளர்ச்சி அடைய செய்வது உள்ளிட்டவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம்.
தமிழக அரசும் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாய சகோதர சகோதரிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், உரிய காலத்தில் மழை பெய்யும் பொழுது காவேரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மழை பொழிவு குறைவாக இருக்கும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. நல்ல மழைப்பொழிவு இருக்க வருண பகவான் அருள் பாலிக்க வேண்டும். காவேரி விவகாரத்தில் சட்ட போராட்டங்கள் உதவி செய்யாது. Give and take policy தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.
இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவேரி விவகாரத்தில் அரசியல் கலக்க கூடாது.
நல்ல மழைப்பொழிவு இருக்க நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டது தமிழ்நாட்டின் அரசியல் விவகாரம் அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
Comments are closed.