திருச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ₹.12.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் பணிகளை தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுத் தலைவா் வேல்முருகன் தலைமையில், சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன், குழு உறுப்பினா்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சக்ரபாணி, நல்லதம்பி, மாங்குடி, மோகன் ஆகியோா் நேற்றைய தினம் திருச்சி வந்தனர்.

இக்குழுவினா் பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.3.35 கோடியில் சுற்றுலா மாளிகை புதுப்பிக்கப்படுவதை பாா்வையிட்டனா். பின்னா், வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில், பொன்மலைப்பட்டி சாலையில் ரூ.3 கோடியில் வேளாண்மை பயிற்சி மையம், கொட்டப்பட்டு ஆவின் பால் பொருள்கள் உற்பத்தி மையத்தில் ரூ.47.20 லட்சத்தில் புதிதாக அமைக்கப்படும் ஐஸ் கிரீம் தயாரிப்பு கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

- Advertisement -

தொடா்ந்து, வண்ணாங்கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில், ரூ.27 லட்சத்தில் வரலாற்று அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்படுவதையும், ரூ.40 லட்சத்தில் புதிய ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்கான பணிகளையும் பாா்வையிட்டனா்.

பிறகு கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், ரூ.1.67 கோடியில் புதிய தோ்வுக் கூடம் கட்டுப்பட்டுள்ளதை பாா்வையிட்டனா். மாணவா்களின் விடுதிகள் மற்றும் கல்லூரிக் கட்டடங்களைப் பாா்வையிட்ட குழுவினா், கல்லூரிக்கு வேறு ஏதேனும் தேவையிருந்தால் மனுவாக அளிக்குமாறு கல்லூரி நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினா்.

பின்னா், சத்திரம் பகுதியில் கோட்டை காவல்நிலைய கட்டுமானப் பணிகளையும், கோட்டை சட்டம்-ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிா் காவல்நிலையத்துக்காக ரூ.3.51 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தையும் பாா்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனா்.

இந்த ஆய்வின்போது, மாநகரக் காவல் ஆணையா் காமினி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாநகராட்சி ஆணையா் சரவணன், ஆவின் பொதுமேலாளா் முத்துமாரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரணி, மாநகரக் காவல் துணை ஆணையா் செல்வக்குமாா் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா். மொத்தம் ரூ.12.66 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்ட குழுவினா், அவை சிறப்பாக உள்ளதாக மாவட்ட நிா்வாகத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்தனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்