வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு – சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்!

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் நன்கு பரிச்சயமான ஒரு பெயர் த. வெள்ளையன். தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவரான வெள்ளையன், உதிரிகளாக சிதறிக் கிடந்த தமிழக வியாபாரிகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைப்பாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். வணிகர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வெள்ளையன், பல அரசியல் கட்சி தலைவர்களுடன் இணக்கமான நட்பும் கொண்டிருந்தவர். இந்நிலையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான வெள்ளையன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் நேற்று (செப்.10) பிரிந்தது. த.வெள்ளையனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்தவர் வெள்ளையன் என புகழாரம் சூட்டியுள்ளார். வெள்ளையனின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், வணிகர்களின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர் வெள்ளையன் என குறிப்பிட்டுள்ளார். வெள்ளையனின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பொதுப் பிரச்சினைகளுக்காகவும், வணிகர்கள் ஒற்றுமை மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் வெள்ளையன் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வெள்ளையன் சிறந்த தமிழ் உணர்வாளர் என புகழாரம் சூட்டிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழீழ விடுதலையில் வெள்ளையன் தீவிரமான பற்று கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் வணிகர்களை ஒருங்கிணைக்க வெள்ளையன் கடுமையாக உழைத்ததாக, வணிகர் சங்கப் பேரவை கூட்டமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

உடல்நலக்குறைவால் காலமான வெள்ளையனின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது தந்தையின் கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே இவருடைய உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வணிகர் சங்கத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக திகழ்ந்த வெள்ளையனின் மறைவுக்கு வியாபாரிகளும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்