வக்புவாரிய திருத்தம் என்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை என்பதை காட்டுகிறது – மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் – திருச்சியில் முத்தரசன் பேட்டி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்…
மத்தியஅரசு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் 142 நக்சல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதம் அழிக்கப்படவேண்டும் என விரும்புபவர்கள் நாங்கள். அதேநேரம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதும் நடைபெற்று வரும்நிலையில், கச்சத்தீவை பிரதமர் மீட்பாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதும், தாக்கப்படுவதை நட்புநாடான இலங்கையுடன் பேசி தடுக்கவேண்டும், உரிய தீர்வு மேற்கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சி நூற்றாண்டுவிழா ஓராண்டுக்கு கொண்டாட தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றும் உள்ளது. அதனை களையவும், நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை செய்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த நூற்றாண்டில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுபோல, பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் சிறுமி பாலியல் சம்பவத்திற்கு உள்ளாக்கப்பட்டது போல, தொடர்ந்து அதே இடத்தில் பல சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. அங்கு பல்வேறு சிறுமிகளின் ஆடைகள் இருந்ததை கண்டு தெரிய வருகிறது. தமிழகத்தில் இதுபோன்று சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைwளிக்கிறது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் போதைப் பொருள் விற்பனை அதிகரித்ததுதான். போதைஊசி, போதை மாத்திரையெல்லாம் பல்வேறு வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை காவல்துறை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.
நீர் பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களை நம்பியே தமிழகம் உள்ளது. நதிநீர் பிரச்சனையில் உரிமைகளை மீட்கும் முயற்சியில் அக்கறை காட்டும் தமிழகஅரசு, ஏரி குளங்களில் தண்ணீர் சேமிக்கவும் அதனை பாதுகாக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கையாள வேண்டும்.
எந்தஒரு விவாதமின்றியும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் விலையும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடுதழுவிய மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாகவும், தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றார்.
மத்தியில் பாஜக மைனாரிட்டி அரசாக அமைந்த பின்னரும் தன்னுடைய நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை. வக்புவாரிய திருத்தம் என்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை என்பதை காட்டுகிறது. தங்களுக்கு ஆதரவான மாநிலங்களுக்கு அதிகமான நிதியும் ஒதுக்கீடு செய்து பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர் எங்கு நிகழ்ந்தாலும், தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவை பிரதமர் நேரில் பார்வையிட்ட நிலையில், தேசிய பேரிடராக அறிவித்து தேவையான உதவியை செய்ய வேண்டும்.
எம்ஜிஆர் – ஜெயலலிதா அதிமுக ஆட்சிக்காலம் என்பது வேறு, எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலம் என்பது வேறு, எடப்பாடி அரசு மத்தியஅரசின் கைப்பாவையாக செயல்பட்டது. எல்லாவித தவறுக்கும் உடந்தையாக இருந்தது எடப்பாடி ஆட்சிதான். திராவிட முன்னேற்ற ஆட்சி மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத ஆட்சியாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் மற்றும் பல்வேறு கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற குற்றங்கள் இனி குறைய வேண்டுமானால், காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது என்பது முதலமைச்சர் கையில் தான் உள்ளது. தற்போது வரை அது குறித்து அவர் எழுதும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் எல்லாம் முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். அதனால் அது குறித்து ஏதேனும் அறிவிப்பு வந்தபின்னர் அல்லது நியமனத்திற்கு பின்னர் கருத்துக்கள் கூறலாம்.
நடிகர் விஜய் தற்போதுதான் கொடியை காட்டுகிறார். அவரது கொள்கை மற்றும் கட்சி குறித்த அனைத்தையும் முழுமையாக வெளியிட்டபிறகு விஜய்யின் கட்சி பற்றியும், அவருடன் கூட்டணி வைப்பது பற்றியும் விவாதிக்கலாம் என்று தெரிவித்தார்.
Comments are closed.