திருச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்!
திருச்சி மாவட்ட சமூகநலத்துறை சாா்பில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டம், தகவல்கள் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கான உதவி எண், மகளிா் உதவி எண், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை குறித்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாகனம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட பள்ளிகளில் ஒரு மாதத்துக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா். இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் நித்யா, ஒருங்கிணைந்த சேவைகள் மையப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Comments are closed.