திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி – ரயில் தடம் புரண்டது போல தத்ரூபமாக செய்து காட்டிய பேரிடர் மீட்பு குழுவினர்!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ரயில் விபத்து ஏற்பட்டால் எப்படி அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, உடனடியாக எப்படி சம்பவ இடத்திற்கு வருவது, விபத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது உள்ளிட்டவை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வே அரக்கோணம் தேசிய பேரிடா் பாதுகாப்பு படை (என்டிஎப்ஆா்) சாா்பில் திருச்சி குட்செட் யாா்டில் ரயில் விபத்து, மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரயில் விபத்து ஏற்பட்டால் எப்படி பயணிகளை மீட்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் படி இன்று காலை 9:15 மணிக்கு ரயில் தடம் புரண்டதாக கணக்கிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 9 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து இதில் 14 பேர் காயம் அடைந்ததாகவும், 4 பேர் உயிரிழப்பு என்ற கணக்கில் மீட்புப் பணிகளும் சிகிச்சைகளும் நடைபெற்றது.
இந்த ரயில் ஒத்திகை நிகழ்ச்சியில் மூன்று கோச்சுகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்றாக சரிந்து கிடந்தன. என்டிஆா்எப் உதவி கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினா் இந்த ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனா். ஒத்திகையின் போது விபத்து நடந்தவுடன் அபாய ஒலி ஒலிப்பது, உரிய பேரிடா் குழுக்களுக்கு தகவல் அளிப்பது, விபத்து நடைபெற்ற இடத்துக்கு ஆம்புலன்சுடன் மருத்துவக் குழுவினா் வருவது, ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கிக்கொண்டோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகைகளைச் செய்து காண்பித்தனா். இந்த மீட்பு பணியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ குழுவினர், ரயில்வே போலீசார் உள்ளிட்டோர் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.