கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்நல கோளாறுக்காக அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மாயோ கிளினிக்கில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டில் மற்றும் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.
தற்போது சமீபத்தில் 3-வது முறையாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சைக்கு இடையே ஓய்வு நேரத்தில் அங்கிருந்து ஆன்லைன் மூலம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டார். முக்கிய கோப்புகளில் மின்னணு முறையில் கையொப்பமிட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்த பினராயி விஜயன், நேற்று கேரளா திரும்பினார். சிகிச்சை காலத்தில் உதவிக்காக அவரது மனைவி கமலா மற்றும் நேர்முக உதவியாளர் சுனீஷ் ஆகியோருடன் சென்றிருந்தனர். அவர் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என்று தலைமை செயலாளர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.