திருச்சியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணப்பாறை, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், உப்பிலியபுரம், துறையூா், தா.பேட்டை பகுதி அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகளில் நேற்றைய தினம் போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்சி மேற்கு மேலப்புதூா் பிலோமினாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.