தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமானது நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி தொகுதி எம்.பி துரை வைகோ,….
நகரின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வளர்ச்சி மிகுந்த நகரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பது முதல் பணியாக உள்ளது. மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்லும் அளவிற்கு விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்வேன். அதேபோல் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பெறுவதற்கு பாராளுமன்றத்தில் எனது கன்னி பேச்சில் வலியுறுத்தியுள்ளேன். அதேபோல் திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலை அமைப்பதற்கு வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து பேசி இருதரப்பினருக்கும் சாதகமான முடிவுகளை எடுத்து நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.