3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – திருச்சியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்!
மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டங்கள் தடா, பொடா ,உஃபா சட்டங்களின் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது, மக்களாட்சி மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாக உள்ளது, நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது. எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பிலும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, இன்று காலை 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முன்னேறி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.