திருச்சி அருகே பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!

0

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு (03.07.24) நவீன், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லால்குடி மதுபான கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நவீனுக்கும் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த நவீன் குமாரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் சிலர் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று காலை ஆங்கரை பகுதியைச் சேர்ந்த கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கலைப்புலி ராஜா திருச்சி அடுத்த சிறுகனூர் காப்பு காடுகளில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இன்று காலை அங்கு சென்று உள்ளனர். அப்போது அவர் போலீசாரை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் தற்காப்புக்காக அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த கலைப்புலி ராஜாவை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கலைப்புலி ராஜா மீது பல வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்