தொடையில் மறைத்து தங்கம் கடத்தல் – திருச்சியில் ₹.1.16 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் பேஸ்ட் வடிவிலான 1605 கிராம் எடை கொண்ட தங்கத்தை தனது தொடைகளில் (Knee caps) மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி ஆகும். இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.