திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் புகார்!
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 6000 ரூபாய் கட்டினால் சீட்டின் முடிவில் போனஸ் ஆக ஆயிரம் ரூபாய் சேர்த்து 7000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி அந்தப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டில் இணைந்துள்ளனர். இவர் கூறியபடி கடந்த இரண்டு வருடங்களாக சீட்டு சேர்த்து பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களாக பணம் எதுவும் தராமல் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை தருமாறு சீட்டு கட்டியவர்கள் கேட்டபோது, எங்களிடம் போலீஸ் உள்ளது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்.
இது குறித்து அவரிடம் சீட்டு போட்டு ஏமாந்த திருச்சி உறையூர் கீழ வைக்கோல் கார தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் மனைவி அருள்மொழி, கிருத்திகா மற்றும் பாதிக்கப்பட்டோர் இன்று திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை கூட்டரங்கில் நடைபெற்ற மனு நீதி முகாமில், மாநகர காவல்துறை ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்….
கடந்த இரண்டு வருடங்களாக பாக்கியலட்சுமி அவரது கணவருடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்தார்.
இவரை நம்பி 150-க்கும் மேற்பட்டோர் சீட்டில் சேர்ந்து 10 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளோம். சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றும் கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குபதிவு செய்து எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்தனர்.