உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை & மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது.
இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில் ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் ஏதோ ஒரு போதைப் பொருளுக்கு ஆட்பட்டு உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டு அந்த போதைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல், போதைக்கு அடிமையானவரும் அவருடைய குடும்பத்தாரும் ஒருவித குற்ற உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து போதைக்கு அடிமையானோரையும், அவரது குடும்பத்தையும் மீட்டெடுத்து மறுவாழ்வு அளிப்பதே இந்த பேரணியின் நோக்கமாகும்.
இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே தொடங்கி திருச்சி மத்திய பேருந்து நிலையம், பாரதிதாசன் சாலை வழியாக சென்று திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தை சென்று நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர்.
மேலும் “போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வு கொடுத்து அவர்களை காப்போம்” என்ற வாசகம் அடங்கிய நோட்டீசை பொதுமக்களுக்கு வழங்கி பேரணியாக சென்றனர்.