திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா விரைவில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி!

0

திருச்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பூங்காவில் அரிய வகை பறவைகளும் வளர்க்கப்பட உள்ளன. மேலும் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை நிலங்கள் செயற்கையாக அமைக்கப்பட இருக்கின்றன. மலைகள், காடுகள் கடற்கரை சமவெளி மற்றும் பாலைவனம் போன்றவை தத்துரூபமாக அமைக்கப்பட இருக்கின்றன. கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படவும் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்…

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் மிக குறைவாக உள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளுக்கு வரப் பிரசாதமாக இந்த பறவைகள் பூங்கா அமைந்துள்ளது. தற்போது பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதன் உள்ளே வரும் சுற்றுலா பயணிகள் சுமார் 3 மணி நேரம் இருக்கக்கூடிய அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளைக்கு 500 முதல் 600 கார் வரை இங்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இது இல்லாமல் வெளியேயும் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இந்த பூங்கா மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படும். விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்ந்து பறவைகள் பூங்காவும் திறக்கப்படும். இதேபோல் முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நிதி கேட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்