திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் விவசாயிகள் பிணம் போல படுத்து போராட்டம்!
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பெறுதல், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சங்கத்தின் மாநில தலைவர் ஐயாகண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் பிணம் போல படுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்….
இந்தியா ஒரு ஜனநாயக நாடு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் டெல்லிக்கு விவசாயிகள் வரக்கூடாது என்று துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா?.
விவசாயிகள் பாஜகவிற்கு எதிரானவர்கள் அல்ல, விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு நியாயமான விலையை கொடுக்க வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி கோதாவரி ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது எங்களுடைய முக்கியமான கோரிக்கையாகும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கின கடனை தள்ளுபடி செய்ய நிதி அமைச்சரும் பிரதமரும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் விவசாயிகளிடம் காவிரியும் கோதாவரியும் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று கூறினார்கள். ஆனால் 300 டிம்சி தண்ணீரை விவசாயிகளுக்கு முறையாக திறக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்திய நாட்டை சர்வாதிகார நாடாக மோடி மாற்றி வருகிறார் என குற்றம் சாட்டினார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மக்களையும் காப்பாற்ற மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக முன் வைக்கிறோம் என்றார்.