திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட இ – சிகரெட்டுகள் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானசேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப் பொருள், இ-சிகரெட்கள் போன்றவற்றை கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இ-சிகரெட்கள் கடத்தி வருவதாக நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பயணிகளிடம் தடை செய்யப்பட்ட இ சிகரெட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள் போல மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள 1,285 இ சிகரெட்ககளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட இ சிகரெட்டுகளை கடத்தி வந்த சம்பவம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.