108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும் . இந்த கோவிலில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
ஶ்ரீரங்கம் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது.
அதன் பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து ஏழாம் திருநாளான இந்த மாதம் 4 ஆம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.
அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். 8 ஆம் திருநாளான நேற்று அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
9 ஆம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம் பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் அருள்பாலித்தார். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.