இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பகிர்ந்து அளிக்கப்பட்டன.
இந்நிலையில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பிரிட்டன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா மீது இங்கிலாந்து நாட்டு நீதி மன்றத்தில் 51க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தொடர்பான பதில் மனுதாக்கலில், தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் காரணமாக திராம்போசைட்டோ பேனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) எனப்படும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனால் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என உண்மையை ஒப்புக் கொண்டது.
ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் ஒப்புதல் வாக்குமூலத்தால் இந்தியர்கள் உள்ளிட்ட தடுப்பூசியை செலுத்திக்கொண்ட உலக நாடுகளின் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பொது மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திருச்சி உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ள கதிர் மருத்துவமனை மருத்துவர் கதிர்ஒளி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்…
கோவி ஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மாரடைப்பு வருகிறது என செய்திகள் வெளி வந்துள்ளது. இது கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் நாம் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு விதமான தடுப்பூசியை எடுத்துக் கொண்டோம். இதில் கோவிஷீல்டு வெளிநாட்டிலும், கோவாக்சின் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டதாகும்.
கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு 98 சதவீதம் பாதுகாப்பு அதிகம், கோவாக்ஸின் செலுத்தி கொண்டவர்களுக்கு பாதுகாப்பு 80 சதவீதமாக இருந்தது.
கோவாக்சின் என்பது
இன்ஆக்டிவேட்டட் வைரஸ் வேக்சின். போலியோ, ரேபிஸ் ஊசிகளை போன்று
ஒரு வைரஸை இன்னாக்டிவேட் செய்து அதை நமது உடம்பில் செலுத்துகின்றோம். இந்த தடுப்பூசி நமது உடலில் ஆக்டிங் வைரஸ் வராமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
கோவிஷீல்டு என்பது புதிய தொழில்நுட்பம் சார்ந்ததாகும். ஒரு வைரஸிலிருந்து குறிப்பிட்ட புரோட்டினை நமது செல்களுக்குள் அனுப்பும் ஒரு தடுப்பூசியாகும். இது கொரோனா தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு கொடுக்கும்.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பிறகு நிறைய மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வருவதற்கு காரணம் இந்த தடுப்பூசி நமது உடலில் தட்டனுக்களை குறைக்கும். ரத்தம் உறைவதற்கு உண்டான தட்டணுக்களை குறைப்பதால் (டிடிஎஸ்) திராம்போசைட்டோ பேனியா சிண்ட்ரோம் உருவாகிறது. தட்டணுக்கள் குறைவதால் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட 21 நாட்களுக்குள் இது போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. பின்னாளில் இது போன்ற நோய்கள் வர வாய்ப்பில்லை. மிக மிக குறைவு. ஒரு லட்சம் பேருக்கு 2.6 சதவீதம் பேருக்கு இது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இதயநோய், உடல்நலமின்றி படுகையில் இருந்தவர்கள், உடல் பருமனாக இருந்தவர்கள் ஆகியவர்களுக்கு வர வாய்ப்புள்ளது எனவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பிரச்சனைகளுக்கான சதவீதம் குறைவு என அந்நிறுவனம் சார்பில் நிரூபிக்கப்படுள்ளது.
அதனால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாரடைப்பு வரலாம் என பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது குறித்து நாம் உடல் பரிசோதனை செய்து கொள்வதிலும் அவசியம் இல்லை.
பரிசோதனை செய்து கொள்வதால் 100 சதவீதம் நமது ரத்த ஓட்டம் சீராக உள்ளதா, இரத்த அணுக்கள் எவ்வாறு உள்ளது, ரத்தம் எப்போது உறையும், உறையாது என்பது தெரியாது. சிறிய பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டால் போய் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என பயப்பட வேண்டாம் என தெரிவித்தார்.