திருச்சி விமான நிலையத்தில் ரூ.70.58 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் துபாயில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
அதில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கம்போல் சோதனை செய்தனா். இதில் ஆண் பயணி ஒருவா், தனது உடலுக்குள் மறைத்து பசை வடிவிலான 977 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ₹.70.58 லட்சம் ஆகும். தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தீவிர விசரானை நடத்தி வருகின்றனர்.