திருச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் ஆகியவை ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலிருந்தும் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு “ஸ்ட்ராங் ரூம்” எனப்படும் பாதுகாப்பு அறையில் வைத்து, தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ் குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு துணை இராணுவத்தினர் கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.