தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்…
பிரச்சாரத்தின் போது மக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு மிகுந்த நம்பிக்கையை தந்தது. முதலமைச்சர், உதயநிதி மற்றும் தி.மு.க வின் முக்கிய பிரமுகர்களின் தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் நல்ல விளைவை தந்துள்ளது. அதீத நம்பிக்கையில் அல்ல அனுபவ ரீதியாக கூறுகிறோம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த பா.ஜ.க தேசிய தலைவர்களுக்கு திடீரென தமிழ்நாட்டின் மேல் அக்கறை வந்துள்ளது. தேர்தல் நேரத்தின் காரணமாக அவர்கள் அடிக்கடி தமிழ்நாடு வந்தார்கள். அக்கறை என்பது எப்பொழுதும் இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு அதிகமாகி உள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அரசியல் சென்று சேர்ந்துள்ளது. அனைவரும் நியாயத்தின் பக்கம் வாக்களிக்க வேண்டும்.
பா.ஜ.க வினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்து போகும். மக்கள் மீது இந்தியா கூட்டணி மேல் நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.