நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – பாரிவேந்தர் வாக்குறுதி!
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலிவலம், மூவானூர், கோமங்கலம், அய்யம்பாளையம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், நல்லியம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்றபடி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்…
விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், இடு பொருட்கள் விவசாய தளவாட பொருட்கள் மானிய விலையில் கிடைக்கவும் உரிய நிதியை பெற்று உதவி செய்வேன்.
நெசவாளர்களின் அடிப்படை பிரச்சனைகள் எதுவாயினும் பெரம்பலூரில் உள்ள அலுவலகத்தில் தெரிவியுங்கள், அதற்கான நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன்.
பெரம்பலூர் எம்.பியாக என்னை மீண்டும் தேர்வு செய்தால் 1500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். தற்போது தொடரும் கல்வி சேவையையும் தொடர்ந்து செயல்படுத்துவேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சை முத்து, மாநில செயலாளர் வரதராஜன், மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் தண்டபாணி, ஓபீஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.