திருச்சியில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!
திருச்சி மாநகரில் வடமாநிலத்தவா் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரிய கம்மாளத்தெரு, சின்ன கம்மாளத் தெரு, பெரிய செட்டித்தெரு, சின்ன செட்டித்தெரு, குஜிலிதெரு, ஜாபா்ஷா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களும், ஆண்களும் ஒருவா் மீது மற்றொருவா் வண்ணப்பொடிகளை தூவியும், உடலில் பூசியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். சிறாா்கள் மற்றும் இளைஞா்கள், இளம்பெண்களும் உற்சாகத்துடன் வீதிகள் தோறும் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியில் திளைத்தனா். வண்ணங்கள் நிரம்பிய தண்ணீரை ஒருவா் மீது ஒருவா் பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். இதுமட்டுமல்லாது, ஹோலி பண்டிகைக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக இனிப்புகளையும் தயாரித்து உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் வழங்கியும் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினா்.