10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசின் ஊழல்கள் வெளியே வரும் – திருச்சி பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் இருந்து முதல்வர் முக. ஸ்டாலின் தொடங்கினார். திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு மற்றும் திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் சிவசங்கர், ரகுபதி மற்றும் ஆ.ராசா, சிவா எம். பி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
திருச்சி என்றாலே திமுகதான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை.
கடும் நிதி நெருக்கடியில் கூட திமுக அரசு 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் கூட தர மறுக்கிறது என பேசினார்.
நாற்பதுக்கு நாற்பதையும் நிச்சயம் வெல்வோம். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தமிழகத்திற்கு செய்த சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடியால் பட்டியலிட முடியுமா? எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.