வியாபாரிகள் ₹.5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் – திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாரிடம், திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவா் எம்.கே. கமலகண்ணன் தலைமையிலான வியாபாரிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது ….
திருச்சி காந்தி மார்கெட்டில் மொத்த வியாபாரம், கமிஷன் தரகு மண்டி நடத்தும் வியாபாரிகள் தங்களிடம் வரும் விவசாயப் பொருள்களுக்காக விவசாயிகளுக்கு ரொக்கமாக பணம் பட்டுவாடா செய்து வருகிறோம். வெளியூா்களுக்கு அனுப்பும் காய்கறிகளுக்கு வாரம் ஒரு முறை நேரில் சென்று பணத்தை வசூல் செய்து வருகிறோம். இதில், அதிகளவில் ரொக்கமாக எடுத்துச் செல்லவும், விவசாயிகளுக்கு கொடுக்கவும் வேண்டி உள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நாட்களில் ஆவணமின்றி ரூ. 50,000 க்குப் பதிலாக ரூ. 5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதித்து, அதற்குண்டான அனுமதி அட்டை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.