தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து உள்ளன.
குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. குஷ்புவின் உருவபொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் திமுகவினர், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் திருச்சி மத்திய மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சார்பில், மாநில அமைப்பாளர் மதனா தலைமையிலான பெண்கள் குஷ்பூ உருவ படத்தை செருப்பால் அடித்து, உருவ படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.