திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு!

0

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து நான் பலமுறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் செவி சாய்க்கப்படவில்லை.
இதனால் எனது வார்டு மக்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறேன்.

ஆகையால் 25 ஆண்டு காலமாக மாமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றிக் கொடுத்த மக்களுக்கும், அமைச்சர் நேருவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து மேயர் மற்றும் ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக உள்ளிட்ட பல கட்சி மாமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தனர்.

ஆனால் என்னை தடுத்தீர்கள் என்றால் காரில் மண்ணெண்ணெய் வைத்திருக்கிறேன், இங்கேயே தீக்குளித்து விடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதைத் தொடர்ந்து இதர கவுன்சிலர்களின் சமாதானத்தை ஏற்காத காஜாமலை விஜய், மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டு சென்றார்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மாநகராட்சி அலுவலகம் வந்த காஜாமலை விஜய், தனது காரில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிகொண்டார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை காரில் அனுப்பி வைத்தனர். திமுக கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா கடிதம் வழங்கி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்